sábado, 18 de febrero de 2012

அடேல் பாலசிங்கம் எழுதிய "சுதந்திர வேட்கை" என்ற நூலைப் பற்றிய எனது பதிவு.

         அடேல் பாலசிங்கம் அவர்கள் எழுதிய "சுதந்திர வேட்கை" புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று நீண்ட நாள் அவாவில் இருந்தேன் இருந்தாலும் அது என் கைகளுக்கு கிடைக்கவில்லை. போன வாரம் அந்த நூலை வாசிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது 480  பக்கங்களை கொண்ட ஓரளவு பெரிய நூல் தான்.  "தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் உள்ளிருந்து ஒரு நோக்கு" என்ற வாசகம் நூலின் முன் அட்டையில் ஆசிரியர் இட்டிருப்பது மிகப் பொருத்தமாக உள்ளது. அதோடு இந்நூலை தமிழ் ஈழ மக்களுக்கு அர்ப்பணம் செய்துள்ளார் மதிப்பிற்குரிய அடேல் அவர்கள். தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் சம்மந்தமான பல ரகசியங்கள் இந்த நூலில் இருக்கும் என்ற எதிர் பார்ப்பு எனக்குள் இருந்தது. ஆனாலும் பெரும்பாலும் நான் கேள்விப்பட்டதும் பத்திரிகைகளில் வாசித்த விடயங்களுமே இந்நூலில் உள்ளது. ஆனாலும் அடேல் அவர்களைப் பற்றி  நான் பெரிதாக பத்திரிகைகளில் படித்ததாக நினைவில்லை. அந்த வகையில் அவரைப் பற்றியும், அவர் தமிழ் ஈழ போராட்டத்துக்கு ஆற்றிய மிகப்பெரிய பங்கையும், எம் மக்கள் மீதும் எங்களுடைய தனி ஈழப் போராட்டத்தின் மீது அவர் கொண்டிருந்த அன்பையும் அறியக் கூடியதாக உள்ளது.
         அடேல் அவர்களுக்கு எம் மண் புதிது, எம் மக்கள் புதிது, எம் கலாச்சாரம் புதிது எம் மக்களின் வாழ்க்கை முறை புதிது இப்படி எல்லாமே அவருக்கு சற்றும் பழக்கம் இல்லாத விடயங்களே. ஆன போதும் எம் மண்ணோடும் மக்களோடும் அவர்களது போராட்டத்தோடும் வெகு இலகுவில் ஒன்றிப்போனது மிகவும் ஆச்சரியத்துக்குரிய விடயம் தான். இவ்வாறு அவர் வெகு சீக்கிரத்தில் எம்மோடு ஒன்றிப்போனதன் காரணம் அவர் எம்மக்கள் மீது கொண்ட பாசமும், எங்களுடைய நியாயமான போராட்டத்தின் மீது கொண்ட நம்பிக்கையுமே என்பது இந்நூலை வாசிப்பதன் மூலம் அறியலாம்.
              மேலும் 1978  ல் அடேல் அவர்கள் பாலசிங்கத்தை திருமணம் செய்ததில் இருந்து 2000  ம் ஆண்டு பலா அவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நோர்வே நாட்டில் மேற்கொள்ளப் பட்டது வரை அடேல் அவர்கள் இந்நூலில் விபரித்துள்ளார். இந்நூலை வாசிப்பதன் மூலம் பாலசிங்கம் அவர்கள் தமிழ் ஈழ போராட்டத்திற்கும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் எத்துணை முக்கியமானவர் என்பது நன்கு புலப்படும். அவர் விடுதலைக்கு ஆற்றிய பங்களிப்பையும் அவருடைய ஆளுமையையும் நன்கு அறிந்து கொள்ளலாம். மேலும் அடேல் அவர்கள் தமிழ் ஈழத்திலும், தமிழ் நாட்டிலும் தான் சந்தித்த இடர்களையும்,கஷ்டங்களையும்,துன்பங்களையும் தான் சார்ந்த தனிப்பட்ட சங்கடங்களையும் மிகத் தெளிவாக விபரித்துள்ளார். தமிழ் நாட்டில் நிலவும் வறுமையையும், தமிழ் ஈழத்தில் நிலவும் சாதி முறமை, சீதன முறமை போன்றவற்றையும் மேலோட்டமாக இந்நூலில் தொட்டுச் சென்றுள்ளார். மேலும் பெண் விடுதலைப்   புலிகள் பற்றியும் அவர்களுடைய வீரம்,அர்ப்பணிப்பு  ஈழப் போராட்டத்திற்கு அவர்களுடைய பங்களிப்பு , அவர்களுடைய தியாகம் போன்ற விடையங்களை மிக ஆழமாக விபரித்துள்ளார். மேலும் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் முக்கியமாக தேசிய தலைவர் அவர்கள் அடேல் அவர்களின் மீது கொண்டிருந்த மரியாதையும்,நம்பிக்கையும் அவரின் தனித்துவத்தை நன்கு உணர்த்துகின்றன. அடேல் அவர்கள் இதற்கு முதல் எழுதிய "விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள்" என்ற நூலைப்பற்றி  தவறான விமர்சனம் செய்த "ராதிகா குமாரசாமி" அவர்களுக்கு இந்நூலில் மிகச் சிறப்பாகப் பதில் அளித்துள்ளார். ஆக மொத்தத்தில் ஒரு வெளிநாட்டுப் பெண்ணாக இருந்து ஈழ விடுதலைப் போராட்டத்தை நன்கு புரிந்து தன்னையே அப்போராட்டத்திற்காக அர்ப்பணித்துள்ளது அவர் மேல் ஒரு கூடுதல் மதிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆக ஈழ விடுதைலையை நேசிக்கும் எல்லோரும் படிக்க வேண்டிய நூல் இது.

த.ஸ்ரீதர்

No hay comentarios:

Publicar un comentario